முதல் டெஸ்ட்: ஷ்ரேயஸ் ஐயர், ஷுப்மன், ஜடேஜா அபார பேட்டிங், இந்தியா 258/4

shreyas_iyer_jadeja_PTI11_25_2021_000124B


 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் முடிவில் இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்திய அணியில் ஸ்ரேயஸ் ஐயரும் நியூசி. அணியில் ரச்சின் ரவீந்திராவும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்கள். 

ஷுப்மன் கில்

இந்திய அணியில் மீண்டும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள் ஷுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலும். அதிக ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 13 ரன்களில் ஜேமிசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அஜாஸ் படேலின் முதல் ஓவரில் ஷுப்மன் கில் ஆட்டமிழந்திருக்க வேண்டும். எல்பிடபிள்யூ முறையீட்டைத் தவறவிட்டதால் நியூசி. அணியால் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே எடுக்க முடியாமல் போனது. ஒரு ரன் கூட எடுக்காதபோது, நடுவர் அளித்த அவுட் ஒன்றை டிஆர்எஸ்- சில் முறையீடு செய்து தப்பினார் ஷுப்மன் கில். காலை வேளையில் ஜேமிசன் அற்புதமாகப் பந்துவீசி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார். எனினும் ஷுப்மன் கில்லும் புஜாராவும் நெருக்கடியைச் சமாளித்து நன்கு விளையாடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்திய அணியில் மீண்டும் விளையாடி வரும் ஷுப்மன் கில், 81 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரை சதத்தைக் கடந்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி 29 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. ஷுப்மன் கில் 52, புஜாரா 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.  

உணவு இடைவேளைக்குப் பிறகு ஷுப்மன் கில்லை 52 ரன்களில் போல்ட் செய்தார் ஜேமிசன். வழக்கம்போல நிதானமாக விளையாடி 26 ரன்கள் எடுத்த புஜாராவை செளதி வீழ்த்தினார். 10 ஓவர்களுக்கு மேல் ரஹானேவும் ஷ்ரேயஸ் ஐயரும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். ஆனால் ரஹானே மோசமான ஷாட்டால் ஜேமிசன் பந்தில் போல்ட் ஆகி 35 ரன்களில் வெளியேறினார்.

ஜடேஜா

தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் ஐயர் 17, ஜடேஜா 6 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா இருவரும் பொறுப்புடன் விளையாடினார்கள். அறிமுக டெஸ்டில் விளையாடும் ஷ்ரேயஸ் ஐயர், 94 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். இந்திய அணியில் கோலி இடம்பெறாததால் ஷ்ரேயஸ் ஐயருக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் ஆட்டத்திலேயே ஷ்ரேயஸ் ஐயர் அரை சதமெடுத்து அசத்தியுள்ளார்.

ஷ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா கூட்டணி 94 பந்துகளில் 50 ரன்களும் 192 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தது. ஜடேஜா 99 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தன்னுடைய பேட்டிங் வலிமையை மீண்டும் நிரூபித்தார். 

முதல் நாள் முடிவில் இந்திய அணி, 84 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 75, ஜடேஜா 50 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinamani – செய்திகள் – https://www.dinamani.com/sports/sports-news/Source
Previous article8-வது தேர்ச்சியா? உள்ளூரில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Next articleகர்நாடகா: தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 60 பேருக்கு ஒரேநேரத்தில் கொரோனா உறுதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here